தென்னாட்டு மொழியறியா நிலையில்இங்கே திணித்துவிட்ட முதலிந்திப் போரில் இந்தி வெந்காட்டச் செய்தசெயல் எண்ணிப் பார்ப்பின் விசையொடிந்த உள்ளத்தே வீரம் தோன்றும் சிறியர்க்கும் தமைமதித்தால் பணிவு காட்டிச் செல்வத்தால் மற்றவற்றால் பெரிய ரேனும் சிறிதளவு தருக்குற்றால் மதித்தி டாமல் செம்மாந்து செல்சங்கப் புலவர் தம்பால் நிறைந்திருந்த தன்மதிப்பு நும்பால் கண்டேன் நேராரும் வயமாகும் இன்சொல் கொண்டீர்! நெறிபிறழாத் தகவுடையீர்! அறுபான் ஆண்டு நிறைவுபெறும் நன்னாளில் வாழ்த்து கின்றேன் எனதுதிரு மணம்நடத்தித் தந்த தன்மை, என்கவிதை சிறுகதையை நோக்கி உண்மை மனமுடனே பாராட்டும் பெருமை தன்னை மாணவர்க்குத் தமிழ்சொல்லி அயர்ந்து வந்தால் கனிவுடனே “முடியரசன்!” என்று தோள்மேல் கையிட்டுச் சிற்றுண்டிக் கடைக்குச் செல்லும் நனியன்பை நான்துணைவி பிரிவால் வாடி நலிந்திருக்க அக்குறிப்பை முகத்தால் நோக்கி பொருள்தந்து போய்வாவென் றென்னைப் போக்கிப் பூரித்த தகவைச் “சிங் கார வேலன் பொரிநெருப்பு முடியரசன் குளிர்நீர்” என்ற பொன்னுரையை, எம்மிடத்துக் குறைகள் காணின் கருவிழியும் செவ்விழியாய்ச் சினந்தும் அந்தக் கணப்பொழுதே அருள்பொழிந்தும் பொதுப்ப ணிக்கே இரவுபல விழித்தெம்மை ஏவும் நெஞ்சை இத்தனையும் தாத்தா!நான் மறத்தல் ஆமோ? |