பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்145

தமிழர் தந்தை

எண்சீர் விருத்தம்

தீமைதரும் தமிழ்ப்பகைவர் தம்மைச் சார்ந்து
    திருநாட்டின் பெருமையினை, தமிழ்ப்பண் பாட்டை
ஏமமுறும் இலக்கியமாம் செல்வந் தன்னை
    இத்தனையும் அழித்தொழித்தோம்; அந்த நாளில்
ஊமைஎன இருந்தானா? இல்லை இல்லை;
    உயர்தந்தை கடமைகளை உணர்ந்த மேலோன்
தீமைஎன இடித்துரைத்தான் பகைவர் தம்மைச்
    சேராதீர் எனப்புகன்றான் எங்கள் தந்தை

இனிமைமிகு தமிழ்மொழியைப் படித்தல் இன்றி
    இங்குவந்த சழக்கரையே கூடி நின்று
கனிவுதரும் அவர்வஞ்சப் பேச்சில் சிக்கிக்
    கண்கலங்கி நின்றிருந்தோம், அந்த நாளில்
நனியன்பு மிக்கநல்லான் “மக்காள்! அந்தப்
    புல்லுருவி நாடாதீர்? உறிஞ்சித் தீர்ப்பர்
இனிஉங்கள் தமிழ்பயில்வீர்” என்றே எம்மை
    இடித்துரைத்துத் திருத்தினன்காண் எங்கள் தந்தை

புதுமைமிகும் இலக்கியமாம் செல்வந் தந்தான்,
    புரட்சிசெய வீரரென ஆக்கி விட்டான்,
பதுமைஎன வாழாமல் தமிழ் மக்கள்
    பகுத்தறிவால் அவைமுன்பில் இருக்கச் செய்தான்,
எதுகையுடன் மோனைபெறும் கவிதை யாக்கும்
    இளங்கவிஞர் பரம்பரையைத் தோற்று வித்தான்,
அதுவன்றித் தமிழ்நலமே நாடு கின்றான்
    அக்கவிபா ரதிதாசன் தந்தை யன்றோ? 3

(கவியரசர் பாரதிதாசனார் மணிவிழா மலருக்காகப் `பொன்னி’ இதழார் தந்த தலைப்பில் பாடப் பெற்ற பாடல்.)