பக்கம் எண் :

146கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

வாழ்த்துகிறார்

எண்சீர் விருத்தம்

பின்னணியில் நின்றஒரு சமுதா யத்தைப்
    பிறரோடு சமமாகக் கொணர்வான் வேண்டி
முன்னணியில் நின்றமையால் வெற்றி பெற்றான்,
    முற்போக்குக் கொள்கைகளை முரசங் கொட்டிச்
சொன்னபடி வாழ்க்கையிலும் செய்து காட்டிச்
    சுயநலத்தார் வகுத்தமைத்த சாதிச் சூழ்ச்சி
பின்னடையச் செய்தானென் றிளைஞர் எல்லாம்
    பெருமகிழ்வால் வாழ்த்துகிறார் வாழ்க என்றே

பெண்ணினத்தை அச்சுறுத்தி விதவை என்ற
    பெருங்கொடுமை வழக்கத்தைப் பழக்க மாக்கிக்
கண்விழித்துப் பாராமல் தாழ்த்தி வந்தோம்;
    கண்சிவக்க மனம்பதறத் துடித்தெ ழுந்தான்,
எண்ணியிவண் மறுமணத்துக் கழகம் கண்டான்,
    எத்தனையோ மகளிர்க்கு வாழ்வு தந்து
கண்ணிறங்கும் நீர்த்துடைத்தான் ஆத லாலக்
    காரிகையார் வாழ்த்துகிறார் வாழ்க என்றே

நகைமுகத்தன், இன்சொல்லன், குறைகள் காணின்
    நாகரிக வன்சொல்லன், தமிழிற் பாடாப்
பகையுளத்தார் நாணும்வகை பேசும் ஆற்றல்
    படைத்தவன்நம் தமிழிசையே தமிழர் நாட்டில்
மிகப்பெருகப் பணிபுரிந்தான், சமயப் பேரால்
    மிகைசெய்தோர் மறைந்தொதுங்கச் செய்தான், நல்ல
தகையுளத்தன், சீர்திருத்த நோக்கங் கொண்டான்
    ஆதலினால் தமிழரெலாம் வாழ்த்து கின்றார்