பக்கம் எண் :

148கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

வாயுறை வாழ்த்து

எண்சீர் விருத்தம்

திருத்தக்கன் தருசிந்தா மணியில் இன்பத்
    தேனுண்டு சங்கத்து நூல்தி ளைத்துச்
சிரித்துவரும் தமிழண்ணல்! நாச்சி யப்பத்
    திருவாளர் தருசிந்தா மணியை இல்லின்
பொறுப்பேற்கும் காதலியாப் பெறுதல் கண்டு
    பூரிப்புக் கொள்கின்றேன்; உங்கள் வாழ்வு
கருத்துவளர் காவியமும் புலவ னும்மாம்,
    கவிநயமாம் பெறுமக்கள் என்ன வாழ்க.

தான்சமைத்த சுவையுணவை இனிதென் றுண்ணும்
    தலைவனைக்கண் டுளமகிழ்ந்தாள் தலைவி என்று
நான்சுவைத்த குறுந்தொகைப்பாட் டுரைக்கும் அந்த
    நலமேபோல் சுவைவாழ்வு வாழ்க தோழி!
தேன்பழுத்த தமிழ்மொழிக்கே ஆக்கந் தேடும்
    தெளிவுரைகள் ஆய்வுரைகள் எழுத வல்லான்
மேன்மக்கள் குழுவில்இவன் அறிஞன் என்ன
    மிளிர்வதுநின் கையில்தான் உணர்தல் வேண்டும்

அனிச்சத்தின் மலர்மோப்பக் குழையும் என்பர்;
    அன்பன்முகம், உளம்திரிந்து நினைத்தால் வாடும்;
மனத்திருக்கும் உண்மையினை நின்பால் சொன்னேன்
    மாதரசே! அடைக்கம்மை நல்லாய்! என்றன்
இனித்திருக்கும் நண்பன்முகம் சுருங்கா வண்ணம்
    இல்லறத்தைப் பேணிடுக, இனிய பேசி
மனக்கினிய செய்திடுக, குறிப்ப றிந்து
    மனைவிளக்காய் அவன்மகிழ வாழ்க வாழ்க