150 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
கா அப்பா எண்சீர் விருத்தம் செந்தமிழைப் பயின்றமையால் தலைமை பெற்ற சிலரிங்குத் தமிழுக்கே ஊறு தேடி வந்ததுண்டு; தமிழ்வாழ முயல்வா ராயின் வாழ்வுகெடும் புகழில்லை பொருளும் இல்லை இந்தநிலை இருந்தமையால் அஞ்சி யஞ்சி இருந்தார்கள்; ஆனால்நீ தமிழைக் காக்க எந்தநிலை நிகழ்ந்தாலும் தயங்க வில்லை எவருக்கும் அஞ்சவில்லை துணிந்து நின்றாய் பன்மொழிகள் பயின்றவர்கள் நமது நாட்டில் பலர்பலராய் இருக்கின்றார்; தமிழைக் காக்க நன்முயற்சி அவரெல்லாம் செய்த துண்டா? நாமுண்டு சோறுண்டென் றிருந்து விட்டார்; முன்வந்து முயல்பவரைக் குறையும் சொல்வார் முத்தமிழைச் செந்தமிழைப் பழித்துக் கூறும் புன்மொழியும் புகன்றிடுவார் இவர்கள் எல்லாம் புலவரெனத் தமிழகத்தில் திரியக் கண்டோம் நுண்ணறிவுத் திறமுடையாய்! நீயும் இங்கு நுனித்துணர்ந்தாய் பலமொழியும்; ஆயி னும்நம் பண்ணுயர்ந்த தமிழ்மொழிக்கே நின்றன் நெஞ்சைப் பரிந்தளித்தாய்! தமிழ்ப்பற்றே மிக்கு நின்றாய்! அண்ணலுன்போல் பன்மொழியிற் புலவர் என்போர் ஆருள்ளார் தமிழ்காக்க? அதனா லன்றோ கண்ணியத்தால் உயர்தமிழ்த்தாய், தீங்கு வந்தால் காஅப்பா துரைமகனே என்று சொன்னாள் |