அன்றொருநாள் தலைநகரில் ஒன்றுகூடி அறப்போரைத் தொடுத்தார்கள் தமிழ வீரர்; நின்றனைநீ முன்னணியில் நாட்டுப் பற்றால் நிலைமறந்து துணிந்தங்கு நிற்கும் போழ்து நன்றுடையாய்! பன்மொழியில் புலமை மிக்காய்! நடமாடும் நூல்நிலையம் போன்றாய்! பண்புக் குன்றனையாய்! தரமறியா அரசு செய்த கொடுமைகளை நினைத்துவிடின் கொதிக்கும் நெஞ்சம் பெற்றெடுத்த தாய்நாட்டைக் காத லித்தாய், பேசுகின்ற செந்தமிழைக் காத லித்தாய், பற்றெதற்குக் கொண்டனைநீ பாழும் நாட்டில்? பன்மொழிகள் கற்றனையே யாது கண்டாய்? பெற்றிருக்கும் திறமெல்லாம் புலமை எல்லாம் பிழைப்புக்கு வழியாக்க முயன்றா யல்லை; கற்றவனே! ஒருசிறிது தமிழைத் தாழ்த்திக் கழறுவையேல் வளமெல்லாம் உனக்கே யன்றோ? நின்வாழ்வு கருதுகிலை தமிழின் வாழ்வே நிலையாக்கக் கருதுகின்றாய் மொழியும் நாடும் பொன்வாழ்வு பெறுவதற்கே முயல்வோய்! நின்னைப் போற்றுகின்றேன்; வாழ்த்துகின்றேன்; மானங்கெட்ட புன்வாழ்வு வாழ்பவர்கள் வாழட் டும்;நீ புதுவாழ்வு தமிழ்வாழ்வு வாழ்க! நாளை தென்னாடு வாழ்த்துவது நின்போல் வாழ்ந்த தெள்ளியரை நல்லவரை யன்றோ? ஆம்ஆம் உலகத்தில் முதன்மைபெறும் ருசிய நாட்டுக் குனையழைத்தல் கண்டுவகை கொண்டோம்; முன்பு பலகணவர்க் கொருமனைவி யாகி நின்ற பாஞ்சாலி கதையுடனே இராம காதை குலவியங்குக் குடிபோகக் கண்டோம்; நம்மோர் குலப்பெருமை கூறுகதை நுழைய வில்லை; நிலவுபுகழ் நம்பெருமை அனைத்துங் கொண்டு நீதூது செல்கின்றாய் வாழ்த்து கின்றோம் |