பக்கம் எண் :

152கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

நின்புலமைத் திறங்கண்டு மகிழ்ந்து போற்றி
    நிலைத்தபுகழ்ப் பல்கலைசேர் கழகம் தானே
முன்வந்து பேரறிஞர் என்னும் பட்டம்
    முறிஎழுதித் தந்திருக்க வேண்டும்; இன்னும்
அன்பதற்கு வரவில்லை யேனும் அங்கே
    அமர்ந்துபணி ஆற்றுதற்கோர் பதவி தந்து
நன்மதிப்பைப் பெற்றதற்கு நன்றி சொல்வோம்
    நாளைக்கே அப்பெயரும் வந்து சேரும்

மயலறுக்கும் நெறிமுறைகள் எழுதிக் காட்டி
    மாந்தருக்கு வழிகாட்டி விளங்கும் நாட்டில்
இயலறிவு மொழியறிவு கல்வி கேள்வி
    இத்தனையும் பெற்றிருப்பர் எழுத்தர் என்போர்;
பயனளிக்கும் இவ்வொன்றும் இல்லா ராகிப்
    பாழ்பட்ட கதைகளையே எழுதிக் கொட்டிக்
கயிறுதிரிக் கின்றதிருக் கூட்டத் தாரே
    காசுமிகும் எழுத்தாளர் இந்த நாட்டில்!

இவரெல்லாம் கூடியொரு சங்கம் கூட்டி
    எழுத்தாளர் சங்கமெனப் பெயரும் சூட்டித்
தவறான வழியினிலே தமிழைக் காட்டித்
    தந்நலமே வளர்த்தார்கள் பிழைத்தா ரன்றி
அவராலே தமிழுக்கோர் ஆக்கம் இல்லை
    ஆணவத்தால் தீமனத்தால் தமிழில் நஞ்சைத்
தவறாமல் கலந்தார்கள்; சங்கந் தன்னில்
    தமிழ்மரபில் பனிமூடிக் கிடக்கக் கண்டோம்

விடிபொழுதில் கீழ்வானில் சிவந்து காட்டி
    விரிகதிர்கள் பரப்புமிளங் கதிரோன் தோன்றப்
படிமுழுதும் பரவிநிலம் மூடி நிற்கும்
    பனிப்படலம் கரைந்துருகி மாய்தல் போல
முடிவில்லை என்றெண்ணிச் சங்கந் தன்னில்
    மூடுபனி நின்வரவால் விலகக் கண்டோம்
விடிவுண்டு தமிழுக்கு நின்னால் என்று
    மேலவனே பாடுகின்றோம் வாழ்த்து கின்றோம்