காதலன் : புத்தகங்கள் படித்துணர விரித்த போதும் புதுக்கவிகள் எழுதிடநான் எண்ணும்போதும் புத்தம்புதுப் படங்காணச் சென்ற போதும் பொல்லாத துயிலே! நீ தொல்லை தந்தாய்! கத்துகுரல் புள்ளொடுங்க வருவேன் என்றாள் கடையாமம் வந்துமவள் வந்தாள் இல்லை; இத்தனைபோழ் தாகியும்கண் மூட வில்லை இரிந்தோடி மறைந்தாயோ காதல் முன்னே! காதலி : நாயொலியால் பெற்றோரும் விழித்து விட்டார் நான்வருவேன் என்றவரும் காத்து நிற்பார் தாயுள்ளம் காட்டாத தலையன் பைத்தான் தந்திடுவார் என்றிருந்த எண்ணம் வீணாய்ப் போயிற்றே! எனைத்துயிலே நீயும் வஞ்சம் புரிகின்றாய்! நீவந்தால் கனவி லேனும் போய்அவரைத் தழுவிடுவேன் அவரும் நானும் புதுவுலகம் சென்றிடுவோம் நீவா ராயோ? ஆசிரியன் : கண்ணிதழ்கள் அறியாமல் குவியப் பெற்றுக் கைப்பொருள்கள் நழுவிவிழக் குறித்த ஒன்றைப் பண்ணுங்கால் மெய்சோரக் கையும் சோரப் பாதியிலே அச்செயல்தான் சோர்ந்து நிற்க எண்ணங்கள் ஓடாமல் நிலைத்து நிற்க இருக்கின்ற கடன்துயரும் வறுமை நோயும் மண்ணகத்தில் மறந்திருக்க அமைதி எங்கும் மருவிடநின் றாடுகின்ற துயிலே! வாழ்க! |