ஏது வாழ்வு? எண்சீர் விருத்தம் துன்புற்றுப் பசிப்பிணியாற் கிடைத்த சோற்றைத் துடிதுடித்து விழுங்குகிறான் அந்தச் சோற்றில் மென்புழுவோ பிறபொருளோ கிடப்ப தோரான் மேதினியில் இயற்கைஎழில் காணு கில்லான் கன்னெறியிற் கோலூன்றி நடக்கும் போழ்து காலிடறி வீழ்கின்றான் பெற்ற கண்கள் நன்னிலையில் இல்லாத தாலே இந்த நானிலத்திற் பிச்சையலால் ஏது வாழ்வு? காலொன்றும் கையொன்றும் அற்றான், மானம் கந்தல்மிகு துணிகொண்டு காப்பான், மூங்கிற் கோலொன்றின் துணைகொண்டு நகர்வான், பற்றுக் கோடொன்றும் வாழ்வதற்கிங் கில்லான், அன்னான் மேலொன்றும் பெருநோயின் கொடுமை தாங்கி வெளியிடத்தே வாழ்கின்றான்; அந்த வாழ்வு மேலென்று காக்கஉயிர் விழைந்தால் வாழ விழைந்தவற்குப் பிச்சையலால் ஏது வாழ்வு? உறுதுணையா வேறெவரும் இல்லான், உண்ண ஒருவழியும் அறியாதான், எழுத்தும் எண்ணும் பெருவகையும் காணாதான், கோவில் வாயில் பெரியவர்கள் சிதறவிடும் தெங்கின் காயை மறுசிறுவர் பொறுக்குதற்கு மனமில் லாமல் மல்லுக்கு நிற்பான்,அவ் வாயில் ஒன்றே உறுமனையா வாழ்சிறுவன் பிச்சை யின்றி உயிர்வாழ எண்ணினவற் கேது வாழ்வு? |