பக்கம் எண் :

160கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

உள்ளம்

எண்சீர் விருத்தம்

இல்லாத பொல்லாத செயல்கள் கூறி
    இதற்கென்றே வாழ்கின்ற உள்ளம் உண்டு;
நல்லவரைக் கெடுத்தொழிக்கும், அன்பைத் தீய்க்கும்,
    நாயகற்கும் மனைவிக்கும் பகையை ஆக்கும்,
கொல்லவரும் பாம்பென்னக் கொடுமை செய்யும்,
    குடும்பத்தில் உடன்பிறப்பில் பிளவுண் டாக்கும்,
சொல்லரிய போர்மூட்டும், தீமை செய்யத்
    துணிவுதரும்; அவ்வுள்ளம் கூனல் உள்ளம்

முடிச்சுள்ளம் எனும்பேரே இதற்குச் சாலும்;
    முதலில்ஒரு நண்பரிடம் குறைகள் சொல்லும்,
அடுத்தகணம் ஓடோடி மற்றோர் தம்மை
    அடுத்திருந்து முதலவரைத் தாழ்த்திக் கூறும்,
படித்தவரைப் பழித்துரைக்கும், கட்சி பேசிப்
    பாழ்படுத்த முனைந்துநிற்கும், இந்த ஒன்றே
தடித்திருக்கும் கூனுள்ளம் வாழும் மட்டும்
    தரணியிலோர் அமைதியிலை பகையே மூளும்.

அமைச்சர்உறுப் பினர்முதலாம் பதவிக் காக
    அலைபவரைக் காண்கின்றோம், நகரின் ஆட்சி
அமைக்கின்ற உறுப்பினராய் வெற்றி பெற்றால்
    அருச்சனைகள் எத்தனையோ செய்வர்; ஆட்சி
சுமக்கின்ற பொறுப்பிருந்தால் போதும் என்று
    சூழ்ச்சிகளை வகைவகையா இழைப்பர் அந்தோ!
இமைப்பொழுதும் சுகம்காணா ஆசை யுள்ளம்
    இளிவந்த செயல்காணாப் பதவி உள்ளம்