பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்163

ஓடி வந்தன; உடனே இரைதனைக்
கொடுக்க மறுத்துக் கொத்தி விரட்டிய(து)
ஒற்றுமை காணேன், உயர்ந்த அன்பைக்
காணேன், பகைமை கண்டேன் அந்தப்
பேதைக் கோழியின் பிழையினைக் கண்டதும்
உலகில் நடக்கும் ஒன்றனை யுணர்நதேன்;
ஈயும் எறும்பும் இருந்திடப் பொறாஅள்
தன்மகன் நோயுறின் தான்மருந் துண்பாள்,
அன்பின் உச்சியில் அமர்ந்திருப் பாள்தாய்
பெரியோன் ஆன பின்னர்த் திருமணம்
நடத்தி மகிழ்வாள் நாள்கள் சென்றால்
அன்பை மறப்பாள் அருமை மகனென
எண்ணவும் செய்யாள் எழுப்புவள் பகையை
பூனையும் எலியும் போல நடப்பாள்
என்னே உலகம்! என்னே தாய்மை!
தாயும் கோழியும் தம்முள் ஒன்றென
வாழ்தல் நன்றோ? வாழின் இழிவே. 41