பக்கம் எண் :

164கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

கம்பன் குரல்

வெண்கலிப்பா

கனவோடு துயில்கவ்வக் கண்மூடி நானிருந்தேன்
புனலோடி வளஞ்சேர்க்கும் பொன்னித் திருநாட்டில்

வருவிருந்து பார்த்திருக்கும் வாழ்வுடையார் சேர்ந்துறையும்
திருவழுந்தூர் எனப்புகலும் சிற்றூர் தனையடைந்தேன்

கம்பன் இருக்குமிடம் காட்டிடுவீர்! எனவினவ
அம்பொன் மணிமாடம் ஆய்கின்ற கலைக்கூடம்

மிகவுடைய, பொருள் அள்ளி மேலோர்க்குத் தருகின்ற
தகவுடைய, வள்ளன்மைத் தனவணிகர் நாடேகின்

காணலாம் எனப்புகன்றார் கண்டவர்கள்; வந்ததிங்கே
வீணதுவோ எனக்கலங்கி விரைந்தேன் மிகவிரைந்தேன்

நாட்டரசன் கோட்டை நகரடைந்தேன் கம்பன்
கூட்டை மறைத்திருக்கும் கோவிலினை நான்கண்டேன்

வணங்கிமுகம் மேல்நிமிர்த்தேன் வானக் குடுமிதொடும்
மணங்கமழும் வெண்புகையின் மண்டலத்துள் ஓருருவம்

வந்துநின்று `நின்விருப்பம் வாய்விட்டுக் கூ’றெனலும்
நொந்திருக்கும் என்மனத்துள் நுழைந்தது காண்பெருமகிழ்வு

ஐயாநீ வளர்கதையை அறிவிக்க வேண்டு மென்றேன்;
`பையாநான் வளர்கதையைப் பாவலர்கள் திரித்துவிட்ட

சரடு மிகவுண்டே என்னைஏன் சார்ந்துநின்றாய்?’
கரடு முரடாகக் கட்டிவிட்டார் கவிவாணர்

உண்மைஎது பொய்மைஎது உணர்வதற்கோர் வழியில்லை
கண்மயங்கி நிற்கின்றேன் கதைகூறி அருளென்றேன்