`முப்பொருளைச் செப்புகிற முதுமைப் பெருநூலாம் முப்பாலை நன்கருந்தி, முச்சங்கக் கனிபிழிந்த சாறருந்திக்காப்பியமாச் சான்றோர் சமைத்துவைத்த சோறருந்தி, நோய்நொடியின் சோர்வகற்ற மாமுனிவர் தேடிவைத்த இலக்கணமாம் சிறந்த மருந்துண்டு ஓடி விளையாடி உயரணிகள் பலபூண்டு நான்வளர்ந்தேன்; இப்புவியோர் நாலுபேர் கூடிநின்று தேன்வளர்ந்த தமிழ்மொழியைத் தெரியாத ஏழையிவன் என்றுரைத்தார், என்நாவில் எழுதிவிட்டாள் காளிஎன்று கொன்றுவிட்டார் என்னறிவைக் கூறுகிறே னின்னுங்கேள் பொன்றா வளஞ்சுரந்து பொன்னி புனலூட்டிக் கன்றாவின் அருளேபோல் காத்தருள நான்வளர்ந்தேன் எனைக்காத்த தாய்நாட்டை எழில்கொழிக்கும் புனலாற்றை நினைக்காத நாளெல்லாம் நீரருந்தா நாளாகும் போற்றற் குரிய பொன்னிக் (கு) அடிமை என்றேன் மாற்றலர்கள் கூடிநின்று மாற்றிவிட்டார் என்கதையை காசுக்குக் கூடும் கணிகைஎனும் பொன்னிக்குப் பேசும் அடிமைஎன மாசுபடப் பேசிவிட்டார்! பாராளும் வேந்தர் பலபேர் எனைவளர்த்தார் ஊராளும் குறுமன்னர் ஊட்டி வளர்த்தோரும் ஏராளம், இருந்தாலும் இவ்வுலகைக் காப்பதற்கே ஏர்ஆளும் வேளாளர் என்னை வளர்த்தவிதம் ஓர்நாளும் நான்மறவேன் உப்பிட்ட என்தோழன் காராளும் கையுடையான் காத்தான் சடையப்பன் அன்பைக் குழைத்தெடுத்(து) ஆர அருத்திஉயிர் என்பும் எனக்காக்கி இருந்தான் அவன்துணையால் வறுமைத் துயரறியேன் வாட்டம் சிறிதுமிலேன் அருமைக் கலையுணர்வும் ஆன்று மிகக்களித்தேன் களிப்புணர்வு பொங்கிஎழக் காவியம் ஒன்றுகண்டேன் அளிக்கருணை காட்டியதால் அந்நன்றி மறக்காமல் |