இறப்பே வா! எண்சீர் விருத்தம் கனிந்தபழச் சுவைமொழியைக் கழறி நல்ல களிப்பூட்டும் சிறுமகவு, தண்டெ டுத்துக் குனிந்துநடை தளர்கின்ற மூத்தோர், வீரம் கொண்டஇளங் காளையர்கள், உலக இன்பம் முனிந்தவர்கள், பிணியுற்றோர், அரசர், ஏழை முதலாக உள்ளோரைப் பரத்தை போல மனமுவந்து மருவுகின்றாய் என்னு ரைக்கு மறுப்புண்டோ இறப்பென்னும் எழில ணங்கே! உன்னைக்கண் டஞ்சுகிறார் கோழை மாந்தர் உவக்கின்றேன் உனைத்தழுவ வருக மாதே! பொன்னைப்போல் புழுவைப்போல் வருத்து நோய்போல் பொல்லாத பாம்பினைப்போல் வந்தால் ஏலேன் தன்னைப்போல் மாந்தரெலாம் எண்ணச் செய்யும் தனிப்புரட்சி யுருவில்வரின் அணைத்துக் கொள்வேன் மின்னைப்போல் வருபவளே இதழ்தா ராயோ? மிடிபட்ட என்னினத்தை வெறுத்து விட்டேன். மக்கள்படும் இன்னல்கண் டஞ்சி நீக்க மனம்வைத்துப் பாடுபடும் தொண்டர் தம்மை மிக்குவரு காதலினால் அணைத்துக் கொள்ள மிகக்கொடிய துப்பாக்கிக் குண்டாய் நஞ்சாய்க் கொக்கரித்து வருகின்றாய் அதனைக் கண்டு கொடியவள்நீ என்கின்றார்; புரட்சி என்னும் மக்களைநீ பெற்றெடுக்க மருவு கின்றாய் ஆதலினால் மதிக்கின்றேன் உன்னை நன்றே 3 |