கன்னமதில் முத்துதிர்க்கும் அழகுக் கண்கள்; கஞ்சிக்கும் வகையின்றித் தெருவில் சுற்றிச் சின்னவர்கை யேந்துகையில் இல்லை என்று சினந்துரைக்க நீர்சிந்தும் பசித்த கண்கள் குடும்பத்தில் நோய்வந்து மிகவருத்த உடல்மெ லிந்து நொந்துழலும் சிறுமகவு துயரம் கண்ட தாய்வருந்தி மனமுடைந்து பெற்ற நெஞ்சு தாளாமல் சிந்துகிறாள் கண்ணீர், அந்தச் சேய்நிலையும் தாய்நிலையும் காணும் தந்தை செயலற்று வழியற்று வறுமை அம்பு பாய்ந்திருக்கும் மனப்புண்ணின் செந்நீர் போலப் பாவமவன் விழிசிந்தும் கண்ணீர் வெள்ளம் ‘திருமணமேன் செயத்துணிந்தேன்? பின்பு பிள்ளைச் செல்வங்கள் பெற்றெடுக்கும் பிழையேன் செய்தேன்? வறுமையுறும் மாந்தருக்கு வாழ்வும் உண்டோ? வளர்செல்வம் பெற்றவர்க்கே வாழ்வாம்’ என்று பொறுமிமனம் வெம்புஉல கோர்செய் கேலி பொறுக்கஉளம் ஆற்றாமல் விம்மு கின்றான் குறுமனமும் இழிசெயலும் நிறைந்த பாரில் கொட்டுகின்றான் கண்ணீரை அந்தோ! அந்தோ! விதவை உலகில் வெண்மதியில் தண்மையுண்டு; வீசும் தென்றல் விளைவிக்கும் நல்லின்பம்; அவளி டத்தும் பெண்மையுண்டு, பருவஎழில் நிறைய உண்டு, பேசுமொழி கிள்ளைஎன்பர், இருந்தும் அன்னாள் பெண்மைநலம் காணுகிலாள், விதவை என்று பெயர்வைத்துக் கொல்லுகின்றார், உலகைக் காணக் கண்ணிருந்தும் குருடாகிக் கண்ணீர் சிந்திக் கயிறில்லாப் பம்பரம்போல் பாழாய் நின்றாள் |