பக்கம் எண் :

172கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

தொழில் உலகில்

வித்திட்டுப் பயிர்செய்து விளைச்சல் கண்டான்,
    விதவிதமா ளிகைபலவும் ஆக்கித் தந்தான்,
முத்துக்குக் கடல்மூழ்கிப் பிழைத்து வந்து
    முதலாளி உலகுக்கே ஒளியைத் தந்தான்,
புத்துக்குள் கைநீட்டும் செயல்போல் மண்ணுள்
    பொன்னுக்கு நுழைகின்றான், அவர்கள் எல்லாம்
மத்திட்ட தயிர்போல நெஞ்சு டைந்து
    வாழ்வின்றிக் கண்ணீரைச் சிந்து கின்றார்

பொது வாழ்வில்

இவ்வண்ணம் மக்கள்படும் துயரம் நோக்கி
    இவைநீக்கி நலங்கண்டு வாழ்வ தற்குச்
செய்வண்ணம் யாதென்று சிந்தித் தாய்ந்து
    செயல்செய்ய அல்லலுற்று, மக்கள் இன்னும்
உய்வண்ணம் உணர்ந்திலரே என்று கண்ணீர்
    உகுக்கின்றார் நல்லறிஞர்; இன்னும் சில்லோர்
கைவண்ணம் பலகாட்டித் தாமே வாழக்
    காசினியில் வடிக்கின்றார் முதலைக் கண்ணீர் 8


புத்து - புற்று (வழக்குச் சொல்)