பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்173

மாணவர் மன்றம்

நிலைமண்டில ஆசிரியப்பா

நாட்டிற் பற்பல நலிவுகள் கண்டோர்
ஓட்டிட வேண்டி உயர்பணி செய்தனர்;
தாய்மொழி நாட்டம் தவிர்ந்தனர் தமிழரென்
றாய்முறை பலகண் டரசியற் போரிடச்
சான்றோர் பலராய்ச் சார்ந்தனர்; சிந்தனை
தோன்றுதல் இலராய்ச் சொல்வதே கேட்டு
மாய்ந்தனர் மக்களென் றாய்ந்தனர் மேலோர்,
சாய்ந்திடும் தமிழகம் தழைத்திட விரும்பி
அல்லும் பகலும் அலைந்து திரிந்து
சொல்லினர் சொல்லினர் சொற்பொழி வாற்றினர்
பெரும்பயன் கண்டிலோம்; பெய்மழை இருந்தும்
அரும்பு தளிருடன் அரும்பும் காயும்
கருகிடல் ஏனெனக் கருதினர் ஒருவர்
துருவினர்; உண்மை தோன்றிய பயனால்
வேரில் தீமை விளைத்திடும் புழுக்கள்
பாரித் திருக்கப் பார்த்தனர்; அவற்றை
நீக்கிடின் நாட்டில் நிலைபெறு நன்மை
ஆக்கிடும், அறிவு வளர்ந்திடும், எனக்கொண்
டன்றே தொடங்கினர் ஆர்வந் துணையா
நன்றே செய்தனர், நாடும் திருந்தும்
மாணவர் திருந்தின் மாநிலம் தெளியும்
காணலாம் நலமெனக் கருதிய பெரியார்
மனத்தகத் தெழுந்தது மாணவர் மன்றம்;
நினைத்தவர் யாரெனின் நிகழ்த்துவன் கேண்மின்!