இளமையில் நரை நிலைமண்டில ஆசிரியப்பா யாண்டுசில வாக நரைபல வாகுதல் யாங்ஙனம் உற்றீர் என்பீ ராயின் பெற்றஎன் தாயோ பேசியும் ஏசியும் ஒருமகன் என்னை உறுதுயர்க் காக்கி மருமகள் என்னும் மாபெரும் பகையால் மனைக்கினி யாளைஎன் மனக்கினி யாளைக் குணத்துயர் வாளைக் கொடுந்துயர்ப் படுத்தி இல்லின் உயர்வும் என்புகழ் உயர்வும் கருதில ளாகிக் கடும்போர் தொடுத்தனள்; ஆளும் அரசோ அயலவர்க் காகி நாளும் தமிழ்க்கு நலிவே தந்து நெஞ்சிற் கவலை விஞ்சிடச் செய்தது; தமிழராப் பிறந்தும் தாய்மொழி தமிழென நினையார் அதனைத் தாழ்த்த நினைத்து வயிறு வளர்ப்போர் வதிவதிந் நாடே; நச்செனும் பொறாமை நயமிலாப் புறஞ்சொல் இச்சகம் பேசல் இளிவரல் புரிதல் மிக்கிடக் கண்டு மெலிந்ததென் உளனே; ஓரிரு நண்பர் உயிரெனப் பழகினும் பலகால் என்னைப் பகைத்துப் பேசிச் சிலகால் பழகும் சீரியோர் பலரே 21 |