பக்கம் எண் :

180கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

பிரியா நண்பன்

எண்சீர் விருத்தம்

எப்பொழுதும் அவன்முகத்திற் சிரிப்பி ருக்கும்
    எதனாலோ சிலநாள்கள் மலர்ச்சி இல்லை,
எய்ப்பின்றிப் பறவைஎனத் திரிவான் எங்கும்;
    இன்றவனோ வெளிவருதல் காணோம்; இல்லாள்
தப்பெதுவும் புரியவிலை யேனும் சீறித்
    தணலெனவே பேசுகின்றான்; குழந்தை ஒன்றே
இப்புவியில் அவன்தெய்வம் அதனி டத்தும்
    இடியொலியைக் காட்டுகிறான் ஏனோ? ஏனோ?

அருள்சிந்தும் விழியிணையில் ஒளியே இல்லை;
    ஆரிடத்தும் கலகலவென் றுரத்துப் பேசி
வருபவன்றான் ஊமைஎனக் காணு கின்றான்;
    வருபுதிய படங்காண முதலில் நிற்போன்
வெறுவெளியில் தனிநிற்கும் தென்னங் கீற்று
    விளைக்குமெழில் அவன்காட்சி என்று கொண்டான்;
பெருமழைபோற் கவிபொழிவான் எழுது கோலும்
    பேசாமல் இருப்பதுவும் ஏனோ? ஏனோ?

இனிமைமிகு தமிழ்மொழியைத் தாழ்த்திப் பேசின்
    எதிர்த்தழிக்கும் அவன்கவிதை; காதற் பாட்டும்
கனிந்திருக்கும்; பகையஞ்சா வீரங் காட்டும்;
    கலப்பைஎனும் படையுடையார் உழைப்பில் லார்க்குக்
குனிந்துதரும் நிலையொழிக்கும்; உணர்ச்சி ஏற்றிக்
    கொடுஞ்செயலை மடமையினைத் தூள்தூள் ஆக்கும்
பனிமழையிற் குயில்போல் வாய டைத்துப்
    பாடாமல் இருக்கின்றான் ஏனோ? ஏனோ?