சிந்தனையைக் கூர்விழியிற் றேக்கிக் கையிற் செவிபொருந்தக் கன்னத்தைச் சேர்த்து நெஞ்சம் நொந்திருக்கும் எண்ணமெலாம் கவிதை யாக்கி நோவொழிந்தான்; கவிதையினைச் சட்டைப் பையில் தந்துவைத்தான்; அவன்மனையாள் நோக்கி அந்தத் தாள்விரித்து மலர்விழியின் இதழ்வி ரித்து வெந்திருக்கும் மனம்விரித்த பாடல் தன்னை விளம்புதற்குச் செவ்வாயின் இதழ்வி ரித்தாள் “மனையாளைப் பிரிந்திருப்பேன் உன்னை ஓர்நாள் மறந்தறியேன் அன்றிலென நாமி ருந்தோம் எனைமறந்து பிரிந்தனையே! காண்போர் எல்லாம் இரட்டையரென் றெடுத்துரைக்க இணைந்திருந்தோம் தினையளவும் தீதறியேன் உன்றன் வாழ்வே தினமுநினைந் திருக்கின்றேன் என்பால் நீதான் மனமுறிய என்னகுறை கண்டாய் தோழா? மாய்கின்றேன் மாய்கின்றேன் அறிவாய் நண்பா! நண்பருனக் கெத்தனையோ பேர்கள் உள்ளார்; நல்லவராய் உண்மையராய் நின்றன் சீரும் எண்ணுவராய் இருந்திடுவோர் எத்து ணைப்பேர்? என்னுளத்தை இத்தனைநாள் உணர்ந்தா யல்லை! கண்கலங்க முகஞ்சுருங்க நீயி ருப்பின் கண்டிருக்க நெஞ்சுபொறேன் அப்பொ றாமை எண்ணுவதல் லால்வேறு கெடுபொ றாமைக் கிடங்கொடுத்து நானறியேன் அறிவாய் நண்பா! என்காதல் மனைவியிடம் சொலம றைப்பேன்; எச்செயலும் நினைமறையேன்; எனது நெஞ்சம் அன்பால்நெக் குருகுமடா! என்னு ளத்தை அறுத்தெடுத்துப் பார்த்தாலுன் னுருவ மொன்றே முன்பாகத் தோன்றுமடா! கவலைக் கெல்லாம் முறிமருந்தாம் என்மகவு பின்னர்த் தோன்றும் என்போடும் குருதியிடை உயர்ந்த நட்பே இயங்குவதை உணராயோ இனிய நண்பா!” (நண்பர் ஒருவர் தவறான கருத்துக் கொண்டிருந்த பொழுது அதனை நீக்கப் பாடிய பாடல்.) |