காவலும் களவும் நேரிசை ஆசிரியப்பா வணக்கம் நண்பா வா என, அவனும் வணக்கம் கூறி, “வாடிய நிலையில் கவலை நோக்கும் கலங்கிய கண்ணும் சிவணிய தென்னை? செப்புதி” என்றனன்; இருளகல் வைகறை ஒன்மனை அழுகுரல் விரவிடப் பதறி விரைந்தெனை எழுப்பினள் துள்ளி எழுந்தேன் “தொலைந்தது சொத்தெலாம் அள்ளிப் போயினன் திருடன் ஐயகோ” என்றென் றிறைந்தனள்; என்மனம் சுழன்ற(து) இன்றோ நேற்றோ என்உழைப் பதனால் வந்த பொருளோ? வாழ்ந்தஎன் முன்னோர் தந்த பொருளாம் தரணியில் அவர்தம் தாளாண் மைக்கொரு சின்னம்! மலைநிகர் தோளால் காத்தருள் தூயநற் பொருளாம்! அந்தோ அந்தோ அதனை இழந்தேன் எனநான் உரைத்தேன்; எள்ளி நகைத்தவன் “முனம்நீ நம்நகர்க் காப்பகம் முந்துற ஓடி உரையா திருந்தனை ஊமையாய்! முன்னோர் சொத்தென முணுமுணுக் கின்றனை முன்னோர் சொத்தாம் முத்தமிழ் நாட்டின் எல்லைகள் போயின ஏன்எனக் கேட்டிலை! இல்லை உரிமை எனஎண் ணினையோ? பகலிற் கொள்ளை பாராய்! உலகம் நகுதற் பொருட்டோ நற்றமிழ் மகனே! மொழியும் நாடும் முன்னோர் சொத்தாம் |