பக்கம் எண் :

186கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

அழியா வண்ணம் அவர்வழி வந்தோர்
காத்தல் வேண்டும்; காக்கும் உரிமை
மூத்தஇம் மண்ணில் முளைத்தோர் யார்க்கும்
உண்டென உணரின் ஒழியும் தீமை
பண்டைய நிலைமை பாரில் வாய்க்கும்;
நிற்கஎன் தோழா! வாயிலில் நின்நாய்
நிற்க எவ்வணம் நிகழ்ந்தது திருட்டு?
மொழிக” என்று மொழிந்தனன் நண்பன்;
ஒழிகஅந் நாயே ஒழிகஅந் நாயே
நன்றி மறந்தது நன்றி கொன்றது
காட்டிக் கொடுக்கும் கயமை மிகுந்தது
வீட்டின் ஒருபுறம் விரும்பும் உணவைப்
போட்டுளார் திருடர் புசித்தது நாய்தான்
கடமை மறந்தது களவும் நிகழ்ந்த(து)
உடைமை யிழந்தேன் எனநான் உரைத்தேன்;
“நாயினைத் திட்டினை நம்மவர் பண்பும்
ஆயின் அன்னதே! அதற்கென் செய்குவை?
பதவி யுணர்வைப் பார்த்ததும் குழைந்து
சதமென எண்ணிச் சார்ந்து திருடர்க்கு
வழிவகை செய்வர் பழிஎன நாணார்
இழிதொழில் புரிந்தும் ஏற்றம் பெறுவர்
தாயைப் பழிப்பவர் தருக்குடன் நிற்பர்
நாடும் மொழியும் நமதென எண்ணார்
ஆடி வருமவர் அடியிணை வருடிச்
சூடி மகிழ்வர் சொல்லவும் வெட்கம்;
தீ நாய்த் துணையால் திருடர் கவர்ந்தது
தோளால் காத்த சொத்தெனப் புகன்றனை;
வாளால் காத்த நாட்டினை வருவோர்
கவர்ந்திட இங்கே காவல் புரிந்திடும்
அவர்மதி என்னே! என்னே!”
என்றுரை கூறி ஏகினன் அவனே 56

(தமிழக எல்லைகள் பறிபோன போது பாடிய பாடல்.)