இளஞாயிறு நிலைமண்டில ஆசிரியப்பா விரிநில மாந்தர் நிறைமட மென்னும் இருளில் மூழ்கி இடர்பல வெய்தித் துயருறுங் காலை சுடரொளி பரப்பி மயல்இரிந் தோட வருமிள ஞாயிறாய்த் தோன்றினை ஏசெனும் தோன்றலே! உலகில் நினக்கென முயன்றிலை பிறர்க்கென முயன்றனை குணக்குன் றென்னக் கூற நின்றனை அழுக்கா றொடுமடம் அவாவுடன் வெகுளி குழுக்கொண் டெழுந்து குமுறும் முகிலென நின்னொளி மறைக்க நிமிர்ந்தன வாயினும் பொன்னுடல் மறைத்தன மின்னொளி மறைத்தில பொன்முடி சூட்டப் புரியா மாந்தர் முண்முடி சூட்டி முடித்தனர் என்னே! இருள்நீக்க வந்த இளஞாயி றுன்றன் அருள்காக்கும் வாழ்வை இரவாக்க எண்ணிச் சிலுவை கண்டனர் சிறியர்; நீயோ குலவுமவ் விரவிலும் நிலவிய கதிரொளி பாரெலாம் பரப்பும் பாங்கு பெற்றனை தொண்டுளம் கொண்ட தூயவர் தம்மை மண்டினி ஞாலம் மறப்பினும், உண்மை கண்டுளம் களிக்கப் போற்றுதல் கண்டோம்; பின்னர் வந்தவர் நின்பெயர் சொல்லிப் பண்ணும் இழிசெயல் பகர்தலோ அரிதே! |