பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்191

ஆறாத் துயரம்

எண்சீர் விருத்தம்

வல்லீட்டி பாய்ந்ததுவே எனது நெஞ்சில்
    மாணவர்காள் எவ்வண்ணம் வாய்தி றந்து
சொல்லூட்டித் தமிழ்சொல்வேன்! சோர்வு பெற்றேன்
    துடித்துமனம் வெந்துழலத் துயரங் கொண்டேன்
வில்லோட்டும் கூரம்போ கொடிய வாளோ
    வெள்வேலோ நகைமன்னர் மாய்ந்தார் என்ற
சொல்லீட்டி பாய்ந்ததுவே! இனிமேல் நாமும்
    சுவையாக நகைச்சுவையைக் காண்ப தென்றோ!

கடுந்துன்பம் எத்துணைதான் வரினும் நெஞ்சம்
    கலங்கலிலான்; சிரிப்பொன்றே துயரை நீக்கி
விடுமென்பான்; மன்பதைக்கும் அந்த வுண்மை
    விளக்கிநின்றான்; கண்புதைத்து நாமெல் லோரும்
படுந்துயரம் தனைமறப்ப தெவ்வா றந்தோ!
    பகர்ந்துவந்த அச்சிரிப்பு மருந்தும் ஆமோ?
நெடுங்கடலே! வான்பரப்பே! சுடுநெ ருப்பே!
    நீணிலமே! பெருங்காற்றே! அழுதீர் கொல்லோ?

திரையுலகில் மன்னனவன்; தமிழ கத்துச்
    சீர்திருத்த நல்லுலகில் மன்னன்; தீய
குறையொழியப் பகுத்தறிவைச் சுவையா ஆக்கிக்
    குழைத்தெடுத்துக் கொடுக்கின்ற மன்னன்; வெய்ய
சிறைஎனினும் அஞ்சலிலான் அங்கி ருந்தும்
    சிந்திக்கும் மன்னனவன் கொடுமைச் சாக்கா(டு)
இரையெனவே கொண்டதுவோ அந்தோ! அந்தோ!
    இவனைஅலால் கிடைத்திலரோ உலகில் எங்கும்!