நெஞ்சம் கலந்த தாய் அறுசீர் விருத்தம் பெயருடன் தருமம் சேர்ந்த பேருளத் தம்மா! நின்றன் செயலிலும் தருமம் கண்டோம் செம்மையின் திறமும் கண்டோம் மயலுறும் இளைஞர் மாதர் வாழ்வினில் உய்தல் வேண்டி முயன்றதும் கண்டோம்; நாளை அவர்க்கென முயல்வார் யாரே? மாணவர் மன்ற மென்னும் வளரிளங் குழந்தை யின்று காணெழில் கூர்ந்து காளைப் பருவமாய் நிற்குங் காலை, பேணிய செவிலித் தாயே! பெருமுது கிழவன் நற்றாய் காணவன் மயிலை முத்து கலங்கிடப் பிரிந்தாய் அந்தோ! புலவராம் எம்ம னோரைப் புன்மொழி புகன்று திட்ட, அலமரும் பொழுதத் தந்த அமைச்சவை நடுங்கப் பேசும் கலகல என்னும் பேச்சைக் காதினாற் கேட்ப தென்றோ! புலவரை இகழ்வார்க் காணின் புலியென எழும்தாய் யாரே? |