20 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
சிலையெலாம் கண்டுநின் கலையெலாம் கண்டிவண் உலவலாம் எனமனம் உந்திட வந்தனம்; வளநா டாளும் வடிவேல் மன்னவன் உளமகிழ் மகளாய் ஒருதனி வந்தவள் முரசொலி முழங்கும் முத்துவள நாட்டின் அரசிளங் குமரி யாமிவள்” என்றனள்; வரவுரை கூறினன் “கலைநலம் விழையும் கருத்துடன் வந்தீர்! தலைதரும் வணக்கம் தந்தனென் நுமக்கே வருக வருக! வடிவுடைச் சிலைநலம் பருக வருக! பாவையீர்! வருக” என் றக்குல மகளிரை அழைத்துடன் சென்று தக்கநற் சிலையெலாம் தனித்தனி காட்டினன்; படிமம் வேண்டினள் சிலைத்திறம் காட்டும் சிற்பியின் வினைத்திறம் கலைத்திறம் அனைத்தும் கண்டு வியந்து பலபடப் புகழ்ந்து “பாரில் நிகருமக்(கு) இலைஎன உணர்ந்தேன் எனைப்போல்ஒருசிலை கைத்திறன் முழுதும் காட்டிச் சமைத்துத் தைத்திரு நாளில் தருதல் ஒல்லுமோ? விழைந்ததென் உள்ளம் வேண்டினென் நுமை”எனக் குழைந்து கனிந்து கூறினள் அரசி; சிற்பியும் ஒப்பினான் “எழில்விளை நிலமே! என்தொழில் அதுவாம், முழுநலம் பெறுசிலை முடிப்பேன், இதுவரை கற்பனைத் திறத்தால் கற்சிலை சமைத்தேன் பொற்புடை நின்போல் பொற்சிலை சமைக்க இன்றே தொடங்குவென் ஏழாம் நாளில் நன்றே முடிப்பேன் நல்லாய்! என்முன் அசைதல் இன்றி அவ்வயின் நில்”லென; நசையுடன் நின்றனள் நங்கையும் அவன்முன். |