பக்கம் எண் :

204கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

பண்ணுயர் தமிழாற் பாடி எழுப்புவை
துயிலை மறந்து தோகை நின்னுடன்
மயலுறப் பேசி மகிழ்ந்தநல் லிரவுகள்
நினைதொறும் நினைதொறும் இன்பம் நிகழ்த்தும்;
அனைய இன்பம் அட, ஓ பெரிதே!
ஆடல் பாடல் அரங்கிலும் என்னுடன்
கூட வந்து குலவித் திகழ்ந்தனை;
ஊடல் சிலகால் உற்றனை யாகிலும்
தேடி வந்து பாடி மகிழ்ந்தனை;
உயிரில் உணர்வில் பேச்சில் மூச்சில்
அயரா தென்னுடன் ஆடிக் களித்தனை;
பிரியா தென்னைப் பேணிய காதலி!
உரியாய் நின்னை வேண்டுவல் ஒன்று;
நரம்பிற் குருதி நடமிடும் வரையிலும்
திறம்பா தென்னுடன் திகழுதி நீயே!