பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை205

5. பைந்தமிழ்க் காதலி

வாடல் தவிர்த்து வாழ்வு நல்கும்
பாடல் என்னும் பைந்தமிழ்க் காதலி!
நின்பாற் கலந்துளம் நெகிழுங் காலை
என்மனம் பிறிதொன் றெண்ணுவ தில்லை;
முற்படு பொருள்கள் கட்புல னாகா;
செப்பிடும எவர்சொலும் செவிப்புலம் நுழையா;
தண்புன லாடுவேன், தையால் வருகுவை;
கண்படை கொள்வேன் கனவிடைத் தழுவுவை;
உண்ணும் பொழுதும் உவந்துடன் அமர்குவை;
இனித்தஎன் துணையொடு தனித்துரை யாடினும்
கனிச்சுவை இதழ்தரக் கனிந்துவந் தணைகுவை!
அனிச்ச மலரடி அணங்கே நின்னால்
உறங்கலும், உண்ணலும் மறந்துளன் பலகால்
இரங்கும் உளத்தினை இனியை எனினும்
பாட்டுல காளும் பைந்தமி ழரசி
ஆட்டிப் படைப்பைநீ ஆடுவன் யானே.

11.2.1985