பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை207

7. எனது வாழ்க்கை

எனது வாழ்க்கை எழில்மலர்ச் சோலை
மனத்தில் இப்படி மற்றவர்க் கெண்ணம்;
வண்ணமும் மணமும் வாரி இறைக்கும்
எண்ணில் மலர்கள் நண்ணுபூங் காவென
இலங்கிட வேண்டும் என்பதென் ஆவல்;
கலங்கிய மனத்தின் கற்பனைக் கனவிது;
நீரே யறியா நிலமென் வாழ்க்கை
யாரே அறிவார்? ஆகினும் உண்மை!
காய்ந்தஅந் நிலத்திற் கண்கவர் சிலசெடி
வாய்ந்ததும் உண்டு; வண்ணமும் மணமும்
தோய்ந்த மலர்கள் துளிர்த்ததும் உண்டு;
நெருங்கிப் பழகியோர் நெஞ்சிற் பழுத்த
பரிவும் அன்பும் உரிமையும் உடையோர்
ஊற்றிய புனலால் தோற்றிய மலரவை;
ஆற்றிய உதவியை ஆருயிர் உளவரை
போற்றிப் போற்றிப் புகழ்தல் அன்றி
ஏற்ற கைம்மாறு யானறி யேனே!

11.06.1980