பக்கம் எண் :

208கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

8. எனது வாழ்வில்

உற்றவள் ஒவ்வோர் நாளில்
    உலையிட அரிசி யில்லாச்
*சொற்றனை என்பாற் சொல்லத்
    துவண்டுளஞ் சோர்ந்து செல்வேன்;
பற்றுளங் கொண்ட நண்பர்
    பரிந்துகை கொடுப்பர்; ஆனால்
உற்றெனை ஏழை யென்றால்
    உளத்தினுள் அதனை யேலேன்! (1)

உடுத்திடும் உடைக்குக் கூட
    ஒரோவழித் தவித்த துண்டு
துடித்திடும் அற்றை நாளில்
    துணிபல தந்து துன்பம்
துடைத்துநல் லன்பு காட்டித்
    தோழர்கை கொடுத்து நிற்பர்;
நடப்பிது வெனினும் ஏழை
    என்றெனை நவில மாட்டேன்! (2)

பிணியெனைப் பற்ற நெஞ்சம்
    பேதலித் துழலுங் காலை
தணியவே வந்து தாய்போல்
    தண்ணருள் சுரந்து காக்கும்
*அண்ணலார் உதவ மெய்யில்!
    ஆருயிர் தங்கு மேனும்
எண்ணவுஞ் செய்யா துள்ளம்
    ஏழையாம் இழிந்த சொல்லை (3)


*சொற்றனை - சொல்தனை
**அண்ணலார் - புதுக்கோட்டை திருக்குறள் கழகத் தலைவர் பு.அ.சுப்பிரமணியனார்