பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை209

மக்களின் கல்விக் காக
    மனம்மிக மாழ்கும் போது
தக்கவர் அன்போ டந்த
    மயக்கினைத் தவிர்ப்ப துண்டு;
சிக்கனம் அறியா என்றன்
    சிந்தனை கலங்கு மேனும்
பொக்கையாய் ஏழை யென்று
    புகலுதல் அறவே செய்யேன்! (4)

வாழ்வினில் துயர வெள்ளம்
    அலைத்திட வந்து பன்னாள்
சூழ்வதும் உண்டு; பண்பர்
    தூயநற் றொண்டர் அன்பர்
தாழ்விலா அளியர் என்னைத்
    தாங்கிடத் தாமே வந்து
சூழ்பவர் உண்டென் றாலும்
    சொல்லிடேன் ஏழைச் சொல்லை! (5)

பணவரு வாயிற் பற்றாக்
    குறையெனைப் பற்றும் போது
துணையென நட்டார் வற்றா
    அருளுடன் தோள்கொ டுப்பர்;
தணலென *நிரப்பு வந்து
    தனியெனைத் தகைத்துத் தாக்க
அணுகினும் ஏழை யென்றால்
    அரசன்யான் ஏற்ப தில்லை! (6)

22-03-1984


*நிரப்பு - வறுமை