214 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
11. பாரதிதாசன் என் அரசன் கவியரங்கே அரண்மனையாய், மக்கள் நெஞ்சே காவலன்றன் அரியணையாய்த் துணிவஞ் சாமை இவையிரண்டும் மெய்காப்பாய்ப் பெருமி தத்தோ டெழுபுலமை நல்லமைச்சாய் எழுது கோலே நவைதவிர்ந்த செங்கோலாய்ச் சங்க நூல்கள் நலஞ்செய்யும் வெண்குடையாய் விளங்க வேந்தன் கவியுலகே அவன்ஆட்சி செய்யும் நாடு காப்பளிக்கும் இலக்கணந்தான் எல்லைக் கோடு! அடையார்தம் நெஞ்சத்தை நடுங்க வைக்கும் அரிமாவின் தோற்றத்தன்; வகுத்த சாதிப் படையாவும் துடிதுடித்துப் புறமிட் டோடப் பகுத்தறிவுப் படைக்கலங்கள் செலுத்தும் வீரன்; தடையாகும் மதயானை அடக்குந் தோட்டி தாங்கிவரும் உரனுடையன்; பாண்டி வேந்தன்; அடடா, ஓ! அவ்வரசன் போர்தொ டுத்தால் அவனெதிரில் நிற்பதற்கோர் ஆளே இல்லை! பெரியாரைத் துணைகொண்டு செங்கோ லோச்சும் பெருவேந்தன் பாவேந்தன் தனது நாட்டில் சரியான சமநீதி வழங்குஞ் சட்டம் தன்னிகர்த்த திருக்குறள்தான்; அரசு மன்றில் புரியாத எம்மொழிக்கும் ஆட்சி யில்லை; புதுமைமிகும் தமிழொலிதான் எங்கும் கேட்கும்; எரியாது மாந்தருளம் குளிர்ந்தி ருக்கும்; எழில்கொஞ்சும் இன்பமெலாம் பொங்கி நிற்கும்! |