216 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
12. நினைந்து மகிழ்கிறேன் பெரும்பள்ளி பழம்பள்ளி பேர்பெற்ற ஆசான்மார் கரும்பள்ளித் தருவதெனக் கற்பார்க்குக் கல்விநலம் தரும்பள்ளி உயர்பள்ளி தனதுழைப்பால் மேல்நிலைக்கு வரும்பள்ளி வளர்பள்ளி மேன்மேலும் வாழியவே! தமிழியலில் நல்லறிஞன் தமிழண்ணல் எனும்பெயரான் அமிழ்தினிய பாமணியன் ஆ.பழநி எனுமன்பன் துமியளவுங் கடன்பிறழாத் தூயமுத்து சம்பந்தன் தமைமறந்து தமிழ்சொல்லத் தானுயர்ந்த எம்பள்ளி! மீனாட்சி சுந்தரப்பேர் மேவியஎம் பள்ளிதனில் தானாட்சி செய்துவரும் தாளாளர் தகவென்னே! நானாட்சி செயக்கல்வி நயமுணர்ந்தார் அன்பென்னே! தேனாட்சிக் காலமது! சிந்தித்து மகிழ்கின்றேன். வாயிலுக்குட் புகுந்ததுமென் வாழ்வுதனை மறந்துவிட்டுக் கோயிலுக்குள் அரசனெனக் கோலோச்சி நானிருப்பேன்! தாயினுக்கு நிகராகத் தமிழூட்டி மாணவரைச் சேயெனவே நான்புரந்த செயலெல்லாம் நினைக்கின்றேன். சொல்லுக்குப் பொருளுரைப்பேன் சொக்கிடுவர்; கடிந்துரைக்கும் சொல்லுக்குப் பணிந்திருந்து சுடுசொல்லும் பொறுத்திருப்பர் மல்லுக்கு வரநினையா மாணவரைப் பெற்றிருந்தேன் இல்லுக்குள் ளிருந்தோய்வில் இவற்றையெலாம் நினைக்கின்றேன். பள்ளிக்குப் பவளவிழா! தேனாறு பாய்ந்ததுபோல் உள்ளுக்குள் நான்மகிழ்ந்தேன் ஓதியஅம் மொழிகேட்டு கள்ளுக்குள் மிதந்துவரும் கனிவண்டாய் நான்மிதந்தேன் அள்ளுற்ற தமிழமுதால் அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன். (மீ.சு.உயர்பள்ளிப் பவளவிழா வாழ்த்து) |