பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை219

14. என்னெதிர் நில்லேல்

முதுமையே நின்னை மோதி மிதித்து
முதுகிடச் செய்குவன் முகங்காட் டாமல்
எவ்வழி யாகினும் ஏகுதி! ஏகுதி!
இவ்வுழை வந்துநீ என்செய இயலும்?
என்தலை தாங்கிய எழில்முடி மேவிய
தன்னிறம் மாற்றுவை; தரையினில் வீழ்த்துவை;
பொன்முகப் பொலிவை மென்மெல அழித்துப்
பன்முகக் கோடுகள் பற்பல தீட்டுவை;
கூரிய விழியின் சீரிய பார்வை
மாறி வழிதடு மாறிடச் செய்குவை;
வீறுகொள் நரம்பின் விறைப்பினைத் தளர்த்தி
மாறுறச் செய்குவை; வேறென் செய்குவை?
கையுங் காலுங் கண்ணுங் காதுமென்
மெய்யும் பிறவும் மேவித் தவழ்ந்து
விளையாட் டயர்ந்திடர் விளைத்திட லன்றி
உளத்தில் படர்ந்துள இளமையின் முறுக்கைத்
தளர்த்திட நின்னால் தகுமோ? நின்னைப்
பிறக்கிடச் செய்குவன் பேதாய் செல்செல்!
உளத்திற் பொங்கும் உணர்ச்சிக் கெதிராய்க்
களத்தில் நிற்பையேல் கவிழ்குவை நீயே!

01.01.1977