222 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
16. அன்றும் இன்றும் சிற்றிளம் பருவம் பெற்றஅக் காலை உற்றநற் களிப்போ ஓரள வில்லை; இரவும் பகலும் எய்துமம் மகிழ்ச்சி அறவே எனைவிட் டந்தோ அகன்றது! விளையாட் டயரும் இளையாச் சிறுவர் களியாட் டாடிக் கள்ளமில் மனத்தாற் பழகினர் நெஞ்சம் இளகினர் அடடா! கழிந்தஅந் நாளைக் கருதுங் காலை உயிர்ப்பதுங் கண்ணீர் உகுப்பதும் வியப்பில்லை; இரும்பின் உருளை விரும்பி உருட்டி வரும்போழ் தின்பம் வளரும் வளரும்! ஓஓ பம்பரம் ஒன்றே போதும் தாவா இன்பந் தந்தெனை வளர்க்கும்; இன்றவை எங்கே? சென்றதும் எங்கோ? இன்றென் தலையே இயங்கிடும் பம்பரம் ஒன்றிய கயிறோ ஓயாக் கவலைகள்; இறக்கை யிழந்தேன் இன்ப வானிற் பறக்க இயலேன் பறக்கினும் வீழ்வேன்; அன்றெலாம் இன்பம் அழைக்குமுன் வருமே! நின்று கூவினும் இன்றது காண்கிலேன்; உதைத்துதைத் தாடும் உருள்பந் தொன்றும் புதைபொருள் போல மறைந்துள தின்றே! ஈங்கிவன் நானே எழுபந் தானேன் ஓங்கி உலகெனை உதைத்துதைத் தாடும்; கவட்டை வில்லுங் கவணும் மறந்தேன்! |