பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை227

19. வாழ்க தமிழரசு

கற்றறி புலவர் நாவில்
    களிநடம் புரியும் பாட்டால்
நற்றமிழ் மணக்கும் பூங்கா;
    நயமிகு போட்டி யிட்டு
வெற்றியில் மிளிரும் நல்ல
    *வெண்டளை மலருங் காடு;
தற்கிணை தானே யான
    தமிழர சென்னும் ஏடு!

வயல்களிற் புரட்சி செய்து
    வளமைகள் சேர்க்க வேண்டிச்
செயல்முறை யனைத்துங் காட்டிச்
    சீர்செயும் உழவர் தோழன்;
பயனுறு தொழில்கள் ஓங்கப்
    பயிற்றிடும் பள்ளி யாசான்;
அயலவர் கண்டு சொன்ன
    அறிவியற் கலைசேர் கோவில்!

பழந்தமிழ்ப் பண்பா டெல்லாம்
    பாரினில் மீண்டுந் தோன்ற
உழந்துழந் தோடித் தேடி
    ஒவ்வொன்றுங் கண்டு வந்து
வழங்கிடும் வள்ளல்; வல்லார்
    வரைந்திடும் ஓவி யங்கள்
தழைந்திடும் ஓவக் கூடம்
    தமிழர சென்னும் ஏடு!


*வெண்டளை - வெண்பா