பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை229

20. தன்னம்பிக்கை

படகொடு கடலிற் செல்வோன்
    பாய்ந்திடும் அலைகள் கண்டு
நடுவினிற் கவிழும் என்று
    நடுங்குவ தில்லை; வான
இடைவெளி பறக்கும் மாந்தன்
    இடர்வரு மோவென் றெண்ணிக்
கடுகள வேனும் அச்சம்
    கருத்தினிற் கொள்வதில்லை.

சரிவுகள் கண்டு மாந்தன்
    சலிப்புளங் கொள்ளு மாகில்
பரிவுடன் சுரங்கம் புக்குப்
    பசும்பொனைத் தருவ தேது?
திரிதரும் சுறவும் வீசும்
    திரைகளும் கடலிற் கண்டு
வெருவுறு மாகில் முத்து
    வெளிப்படல் காண்ப தேது?

எரிசுடர் வான வீதி
    இடர்களை அஞ்சி நின்றால்
அறிவியல் மாந்தன் திங்கள்
    அதனிடை நடப்ப தெங்கே?
சிறைதுயர் தூக்கு மேடை
    செக்கடித் தொல்லை கண்டு
வெருவுது மாகில் நாடு
    விடுதலை பெறுவ தெங்கே?