பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்23

எது சிலை எது நீ எனக்காண் பரிது!
புருவச் சிலையில் பூத்துள வியர்வால்
உருவச் சிலை எது உன்னுடல் எதுவென
உணர வல்லேன்; ஒப்பிலை இவற்கே!
இணர்மலர்க் கோதையின் இதழின் சிரிப்பும்
இன்னருள் விழியும் எப்படிப் படைத்தனை?
கற்பனை மிகுத்திடும் சிற்பக் கலைஞ!
நிற்புகழ்ந் தேத்த முற்படும் எனக்கு
நாவும் ஒன்றே நானென் செய்கேன்?’

சிலையில் ஒருகுறை

`பலபடப் புகழும் பாவாய்! என்றன்
கலைமுறைத் திறனைக் காட்டிலேன்; நெஞ்சில்
வாழும் வடிவின் வார்ப்படம் இவ்வுரு
ஊழால் அமைத்திடும் உருவினில் ஒருகுறை
உளதிவள் நெஞ்சை உளியாற் படைத்த
சிலையிற் பொருந்தச் செய்திலேன்’ என்றனன்;

நெஞ்சம் கலந்தன

`நெஞ்சை நும்பால் நிறுத்திச் சென்றேன்
வஞ்சம் செய்தீர்’ என்றனள் வஞ்சி;
தொலைவில் இருக்கும் சிலையைக் காணத்
தோழி அகன்றனள், தூயநற் கலைஞன்
`வாழி நெஞ்சே வாழிய மயிலி
என்றன் நெஞ்சும் உன்றன் நெஞ்சும்
ஒன்றிய படியால் எடுத்ததைச் சிலையில்
வைத்திட மறந்தேன் மைத்தடங் கண்ணி!
தைத்திரு நாளில் தாம்கலந் தனவே;
மன்னன் மகள் நீ மயலுறும் என்பால்
அன்புடன் கடைக்கண் அருளுதி யோ?’ என,