பக்கம் எண் :

24கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

காதல் மன்னன்

`மாண்புயர் கலையில் மணிமுடி யரசர்!
ஏனுமக் கையம்? என்மன வுலகில்நீர்
ஆளும் மன்னர்! அன்பரீர் நும்மை
நாளும் நினைந்தே நலிவுறு கின்றேன்’
என்றலும் தோழி இடையில் வந்து
நின்றனள் பின்னர் நீங்கினர் இருவரும்;
ஆடினன் பாடினன் அருவி நீரில்
ஆடினன் ஓடினன் ஆண்டுள மலர்களைச்
சாடினன் அச்சிலை சார்ந்துதன் மெய்யால்
மூடினன் காதலில் மூழ்கினன் சிற்பி;

வேந்தனும் சிலையும்

வேட்டம் போகிய வெள்வேல் வேந்தன்
கோட்டம் காணிய குறுகினன் ஆங்கண்
`குறிஞ்சி நாட்டின் கோமகன் வந்தான்
அருந்திறல் அரசர்க் கரசன் வந்தான்’
என்றிரு காவலர் இசைத்திட, எழுந்து
சென்று வணங்கிச் சிற்பக் கலைஞன்
‘குறிஞ்சி நாட! நின் கொற்றம் வாழி!
செறிந்தநல் லறஞ்சேர் செங்கோல் வாழி
தெரிந்த வகையால் செய்துளேன் சிற்பம்
அறிந்திட வந்துளீர் அடியனேன் வணக்கம்;
என்று கூறி இயற்றிய சிலைஎலாம்
நன்று காட்டிட, நாடாள் வேந்தன்
அழகோ வியமாய் ஆண்டுள சிலையை
விழியால் பருகினன் வியந்தனன் அவன்திறம்
நின்றுள சிலையெலாம் நிரல்பட நோக்குவோன்
ஒன்றிய ஒருசிலை உற்று நோக்கினன்
மயிலியின் சிலையில் மயங்கி அதனை
விலையால் பெறுவான் விழைந்தனன்; சிற்பக்
கலைஞன் அதன்நிலை கழறினன் விரித்து;