ஆசை அரும்பியது வடிவேல் மன்னன் மகளெனக் கேட்டலும் கொடியிடை யிவள்போல் குவலயம் யாங்கணும் வடிவுடை யழகி வாழ்ந்திடல் காண்கிலேன் என்னடி வணங்கித் திறைகொடுத் திருக்கும் மன்னவன் இவற்கோர் மனங்கவர் மகளுளாள் என்ப தறிந்திலேன் இன்றே தெரிந்துளேன் பின்பவட் காண்பேன் பேதையை மணப்பேன் என்று மனத்துள் எண்ணினன் சென்றான். தூது தோற்றது சென்ற குறிஞ்சியான் செய்தி எழுதி வடிவேல் மன்னனின் மகட்கொடை வேண்டிக் கடிதிற் செல்லும் காவலற் போக்கினன்; முடங்கல் கண்ட முழுமதி முகத்தாள் தடங்கல் சொல்லித் தானொரு சிற்பிக் குரியள் என்பதை உணர்த்துக என்றனள்; சீற்றம் எழுந்தது சிறியவள் விடுத்த செய்தியைக் கேட்டுச் சீறி எழுந்தனன். `சிற்றர சன்மகள் மீறிய உரைசொல மேவிடும் செருக்கைக் கூரிய மதிகொடு கொட்டம் அடக்குவேன்’ தீப்பொறி சிதறச் சினந்துரை கூறிக் `கூப்பிடு அந்தக் கொடுஞ்செயற் சிற்பியை’ என்றலும் ஏவலர் ஏகினர் கொணர்ந்தார்; சூழ்ச்சி சுழன்றது நின்றிடும் சிற்பியை நெருங்கினன் குறுகிக் `கலைவலோய்! நின்றன் காதற் குறிப்பின் நிலையெலாம் அறிகுவன் நீயொரு குடிமகன் அரசியை மணத்தல் அடுக்குமோ? அதனால் கருமலைக் குறிஞ்சிக் காவலன் ஆக்கிடக் கருதி உனையிவன் கடிதின் அழைத்தேன்; |