பக்கம் எண் :

26கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

என்மொழி கேட்க இசைகுவை யாயின்
மன்மகள் நினக்கு மனைமகள் ஆவள்
உன்கலைத் திறனை உலகமும் ஏத்தும்’
என்றனன் வேந்தன்; இசைந்தனன் சிற்பி;
‘குன்றடர் மலையைக் குடைந்தொரு கால்வாய்
சென்றிடப் படைத்துச் சிற்பத் திறமெலாம்
காட்டி அதனிரு கரையிலும் அமைத்திடல்
வேட்டனன் யானே விரைவினில் முடிப்பின்
வேட்டவள் தன்னை வியன்மணம் கொள்வாய்;
காட்டுக நின்திறம் கலைஞ! என் ஆணை
வினைகள் முடியுமுன் விழைவோட் காண
முனைவதும் குற்றம்இம் மொழியுமென் ஆணை,
எனமொழிந் திருந்தனன் இறையவன் அரியணை;

சுழல்மனம் துணிந்தது

மனம்நிறை துயரினன் மயங்கினன் செய்வகை
யாதென அறிகிலன்; `யானென் செய்குவென்
தீதுறு மோ?’எனச் சிந்தனை செய்தனன்;
மயிலியின் திருவுரு மனக்கண் தோன்றலும்
வெயிலவன் போல வெண்முகம் சிவந்தது;
`குறிஞ்சி நாட; நீ கொடுத்தஇவ் வாணையை
விரைந்து முடித்துநான் வெற்றியுங் கொள்வேன்’
எனுமொழி கூறி ஏகினன் சிற்பி;

வினைத் திறன் வெற்றி

காதல் உணர்வு கருத்தினில் உந்தி
மோதி எழுதர முனைந்தனன்; உழைப்பால்
மலையைக் குடைந்தனன் மாபெருங் கால்வாய்
அலையொடு பாய்ந்த(து) அதனிரு கரையில்
உலகம் உவப்ப உயர்பெருஞ் சிலையெலாம்
படைத்தனன்; ஆண்டுகள் பலப்பல கடந்தன
உடலந் தளர்ந்தனன் உள்ளந் தளர்ந்திலன்