தடந்தோள் வீரன் தலைநிமிர்ந் திருந்து வெற்றிச் செருக்கொடு விழித்து நோக்கினன் பெற்ற களிப்பால் பெருமூச் செறிந்தனன்; சிற்றுளி கைவிரல் பற்றி யிருந்தது; காதற் கனவு பலித்திடக் கண்டேன் ஏதுக் கினித்துயர்? இவ்வுல காள்வேன் நானும் அவளும் வானம் பாடி போலப் பறந்து வானில் திரிவோம் எனப்பல கற்பனை எண்ணி நின்றனன்; சூழ்ச்சி வென்றது சினப்படு வேந்தன் செய்ததோர் சூழ்ச்சியால் ஆங்கோர் கிழவி அழுது வந்தனள்; `தீங்குனக் கென்ன? செப்’பெனச் செப்பினள்; `வடிவேல் மன்னன் மகளென வந்த கொடியிடை மயிலி மடிந்தனள்’ என்றாள்; அலறினன் கதறினன் `ஐயகோ’ என்றனன் `பலபகல் இரவுகள் பாடுபட் டுழைத்ததால் உறுபயன் இதுவோ! உலகம் முடிந்ததோ! இருளெனைச் சூழ்ந்ததோ! இனிஉயிர் விழைவதோ!’ கலைஞன் புலம்பல் காடெலாம் பரவி மலையகம் மோதி எதிரொலித் தெழுந்தது; மாதின் சிலைபால் ஓடினன் மயங்கி மோதினன் முட்டினன் `மோனத் திருக்கும் காதற் சிலையே கண்ணீர்த் துளியால் குளித்திடு! என்னுயிர் குடித்திடு விரைவில் யாண்டுச் சென்றனை? யாதுநீ எண்ணினை? ஆண்டு வருவேன் ஆரூயிர்க் காதலி!’ என்றவன் புலம்பிக் குன்றினில் ஏறி நின்றனன் வானை நிமிர்ந்து நோக்கினன்; |