பக்கம் எண் :

28கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

காற்றில் கலந்தான்

விரலுறு சிற்றுளி வீசி எறிந்தனன்
`மயிலி மயிலி மனங்கவர் மயிலி
மயிலி நானும் வருவேன்’ என்று
பலகால் அலறிப் பாய்ந்தனன் கீழே
சிலையாய் நிற்பவள் சீறடி வீழ்ந்தனன்;
கதறலும் உயிரும் காற்றுடன் கலந்தன
சிதறிய குருதி சிலையெலாம் நனைத்தது
கவலைகள் தீர்ந்தான் காதலும் தீர்ந்தான்;
திவலைகள் அலறின சிலைகளும் அலறின
குன்றுகள் அலறின குகைகளும் அலறின
பறவைகள் அலறின பாரெலாம் அலறின;

அவலப் பாடல்

மாய்ந்தனன் சிற்பி என்றொரு மாற்றம்
தோய்ந்தது செவியில் துடித்தனள் மயிலி;
`ஐயகோ ஐயகோ ஆர் செய் சூழ்ச்சி?
வையகம் பொறுக்குமோ! வானகம் இருக்குமோ!
உண்மைக் காதலை உலகம் வெறுத்ததோ?
பெண்மைக் கிங்கே பெருந்துயர் தானோ!’
என்றனள் ஏங்கி ஏகினள் குறிச்சிக்
குன்றினில் ஏறிக் குத்தினள் கீழே
சிலையின் அருகே அவளும் சேர்ந்தனள்
கலையும் உயிருடன் காதலும் தீர்ந்தனள்;
மலையும் மரமும் மலைத்து நின்றன;
அழும்ஒலி போல அவலம் பாடி
இழுமெனும் ஒலியால் இயங்கிய(து) ஆறே. 293

(பழமைச் சிறப்பு வாய்ந்த இலக்கிய வளங்கொண்ட பாரசிகம், என்றென்றும் நிலைத்து வாழும் உயிர்க் கவிஞர் பலரைத் தந்துள்ளது. அக்கவிகளுள் நிசாமி என்பவரும் ஒருவர். அவர் படைத்த காவியங்கள் உணர்ச்சி வேகம் மிக்கவை. கோசுரு சிரீன் என்னும் பெருங் காப்பியம் அவர்தம் படைப்புகளுள் ஒன்றாகும். அக் காவியக் கதையைத் தழுவி எழுதப்பட்டது இந்நெடும் பாட்டு.)