பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை231

21. சேரிடம் அறிந்து சேர்

நளிமலர்க் காவுள் வளிவரு மாகின்
குளிர்வுறும் மணம்பெறும் நலமும் கொடுக்கும்;
சுடுநிலந் தழீஇ அதுவரு மாகின்
கொடு *வளி யாகித் துயர்தான் கொடுக்கும்;
தேனொடு கலந்தால் ஆன்பால் சுவைமிகும்;
நீரொடு கலக்குமேல் சீரது குறையும்;
இருசுழிக் கொம்புடன் வருகுறிற் ககரம்
பெருகிய ஒலியுடன் நெடிலெனப் பெயர்பெறும்;
ஒருசுழிக் கொம்புடன் காவெனும் நெடிலுறின்
குறைவுறு மொலியுடன் குறிலெனப் பெயர்பெறும்;
நல்லவர்ச் சார்வோர் நல்லோ ராகுப
அல்லவர்ச் சார்வோர் அல்லரா குபவே;
சேரிடன் அறிந்து சேர்க இன்றேல்
சீரழி வாகிச் சிறுமை மிகுமே!

29.04.1980


*வளி - காற்று