232 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
22. புகையும் மனத்தன் அகவை* எனக்கோர் இருபத் தைந்தில் பகரரும் விருப்பால் பழகினேன் நின்பால்; மணிவிழாக் கடந்தது மற்றதன் பின்னும் பிணிவிடா** திருந்து பேணினேன் நின்னை; அல்லும் பகலும் அகலா திருந்து புல்லிப் பயின்று பொழுதெலாம் போற்றினேன்; தீயன் என்றுனைச் செப்பின ராகினும் நீயென் தோழன் எனநான் நினைந்தேன்; துணைவி நல்லாள்நின் தொடர்பை விடுகெனப் பணிவுடன் பலநாள் பகர்ந்தனள் எனினும் பிரிந்தே னல்லேன் பித்துடன் நின்னொடு திரிந்தேன் மகிழ்ந்தேன் தெரிகுவை அனைத்தும்! கவலைகள் என்னைக் கவ்வும் பொழுதெலாம் உவகை*** பெறுவான் உன்னை நயந்து கற்பனைக் காவுள் கைத்தலம் பற்றிப் பொற்புடன் உலவுவேன் புதுப்புதுக் கவிதைகள் எத்தனை எத்தனை இயம்பினை! இனியாய்! நலம்பல நல்குவை யாகினும் நண்பா பொலிந்த தோற்றமும் புகைந்த மனமும் அடைந்துளை யாதலின் அறியா வண்ணம் தொடர்ந்து பற்பல தொல்லைகள் தந்தனை நட்பிடைக் குய்யம்**** நயந்தனை; நீதான் கொன்றன்ன இன்னா செயினும் நீசெய் ஒன்றுநன் றுள்ளினேன் ஆதலின் உன்னை விட்டு விலகேன் வெண்புகைச் சுருட்டே! 21.10.1984
*வயது ** தொடுப்பு *** பெறும்பொருட்டு **** வஞ்சனை |