பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை233

23. புகைப் புராணம்

வெண்புகைச் சுருட்டை விரலிடைப் பற்றி
ஒண்முகஞ் சுருங்க உறிஞ்சிடும் காளையர்
வாயுட் புகுந்து மூக்கின் வழிவரும்
மாயச் செயல்செயும் மந்திர வாதிநான்;
நெருப்புள இடத்தைப் பொறுப்புடன் உணர்த்தி
முறைக்கடன் ஆற்றும் முன்னறி விப்பு;
அரிவையர் தமக்கே அழுதுகண் ணீர்விடல்
உரிமைச் சொத்தாம் உலகினர் உரைப்பர்;
போர்முகங் கண்ட தார்முக வீரரும்
நேர்முகங் காட்டி நின்றிடின் என்முன்
கண்களைக் கசக்கிக் கலங்கிடச் செய்யும்
எண்ணரும் வீரம் என்பா லுண்டு!
பத்தியால் அடியவர் படத்தின்முன் கொளுத்திய
பத்தியில் வளைந்தும் நெளிந்தும் படருமென்
அத்தனை அழகும் அரிவையர் கண்டுதான்
தத்திட தாகிட தாமென நடனம்
முத்திரை வைத்தவர் முயன்று பயின்றனர்;
அடுப்படி அறையில் ஆட்சி புரிவேன்
தடுத்திடும் சுவர்களின் தளதள முகத்தில்
வடுப்படக் கரியை வாரிப் பூசுவேன்;
மடைப்பளி மேற்புறம் மன்னவன் எனக்குத்
தனிவழி அமைப்பர் தலைநிமிர்ந் தேகுவேன்
எனைவழி மறித்திட எவரால் இயலும்?
குடில்களில் வேய்ந்த கூரைகள் ஓடுகள்
தடைசெயின் அவற்றிடைத் தப்பிப் புகுந்து