பக்கம் எண் :

234கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

வெளிவரு வேன்எனை விஞ்சியோர் எவருளர்?
என்றும் சான்றோர் எண்ணம் போல
நின்றுமேல் நோக்கி நிமிர்ந்தெழும் இயல்பினேன்;
தடுத்துப் பிடித்துத் தடைசெயச் சிறைசெய
எடுத்திடும் முயற்சிகள் என்னிடம் தோற்கும்;
புகுதற் கியலாப் புல்லிய இடத்தும்
புகலால் என்பெயர் புகைஎனப் புகல்வர்!
நல்லியல் மாதர் *நடுவினை நிகர்த்திடும்
மெல்லிய உருவில் மேவுவேன் எனினும்
பல்வகை ஆலையில் பருத்துள குழாயில்
விக்கிர மாதித்தன் வேதா ளம்போல்
உக்கிர மான உருவொடு வருவேன்;
மணம்படு பொருளிலும் மயங்கிநான் எழுவேன்;
பிணம்சுடு காட்டிலும் பேருலா வருவேன்;
ஆண்டியின் கையிலும் அடங்கி யிருப்பேன்;
ஆண்டவன் முன்னரும் அடைக்கலம் புகுவேன்;
சிறுகுடில் ஆகினும் வளமனை யாகினும்
சிறியவன் எனக்குச் சிறப்பிடம் உண்டு;
நெருப்பின்றிப் புகையா நிலையினை உணர்வீர்
சிறப்புறும் என்புகழ் செப்பினேன் உமக்கே!


*நடு - இடை