பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை235

24. களிதரு சுரும்பு
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மணம்விரி மலருள் நறவம் மாந்தித்
துணையுடன் திரிதரு சுரும்பே! நின்றன்
மென்சிற கொலியால் எழுப்பிடும் மெல்லிசை
நன்னர் யாழின் நரம்பினை வருடப்
படர்தரும் இசையின் பான்மைய தாகித்
தடஞ்செவி பாய்ந்துளம் தழைத்திடச் செய்தது;
புள்ளிகள் மேவிய பொன்னிறச் சிறகர்
அள்ளி யிழைத்திடும் அழகின் வண்ணம்
கண்ணுக் கினியதோர் காட்சியாய்த் திகழ்ந்தது;
கண்ணுங் கருத்துங் களிகொளச் செய்யும்
பண்ணும் எழிலும் படைத்தனை! வாழிய!
நின்செயல் என்னை நெகிழச்செய் ததுவே!