பக்கம் எண் :

236கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

25. கல் சொன்ன கதை

தரையினில் மலையாய் நிற்பேன்
    *தளிதனில் சிலையாய் நிற்பேன்
பொறைமிகு தூணும் ஆவேன்
    பொடிபடும் கல்லும் ஆவேன்
அரைபடும் அம்மி யாவேன்
    ஆடிடுங் குளவி யாவேன்
நெறியினை ஒழுங்கு செய்ய
    நிரப்பிடுஞ் சரளை ஆவேன்!

விலையிலா மணிக ளாவேன்
    வெறும்பரற் கல்லும் ஆவேன்
மலையெனப் பெரியோ னாவேன்
    மணலெனச் சிறுவ னாவேன்
விலைமிகு மாளி கைக்குள்
    விந்தைசேர் வடிவில் நிற்பேன்
குலைவுறுங் கூரை வேய்ந்த
    குடிலுக்குத் துணையாய் நிற்பேன்!

ஆடையை வெளுப்பார் என்மேல்
    அடிப்பினும் உதவி நிற்பேன்
ஆடுமென் தலையைப் பற்றி
    ஆட்டினும் அரைப்பேன் மாவை
பாடுகள் படுத்தும் அந்தப்
    பாவையர் என்னை அம்மி
மேடையில் உருட்டும் போழ்தும்
    மிளகுகாய் அரைத்தே நிற்பேன்!


*தளி - கோவில்