இவ்வணம் உதவல் கண்டும் இளகிடா மனத்துக் கென்னை எவ்வணம் உவகை சொல்ல இசைந்ததோ உலகம்? பாடம் செவ்வணம் பயிலாப் பள்ளிச் சிறுவர்தங் கையிற் சிக்கின் அவ்வவர் விருப்பம் போல அழிவுகள் பலவுஞ் செய்வேன்! சிற்றுளி கொண்டே என்னைச் சிதறிட உடைப்பார் மாந்தர் மற்றவர் உண்ணும் போது மறைந்திருந் துடைப்பேன் பல்லை; கொற்றவர் போலே எண்ணிக் குனிந்திட லின்றிச் சென்றால் உற்றவர் அறியும் வண்ணம் ஒருசிறி திடறி வைப்பேன்! படியெனக் கிடந்தால் கால்கள் பதியஎன் தலைமேல் வைப்பார்; வடிசிலை யானால் தாளில் வருபவர் தலையை வைப்பார்; படிகிற நிலையைக் காணில் பண்பிலார் மிதிப்பர்; ஆனால் முடியினை நிமிர்த்து நின்றால் முடங்குவர் என்னே மாந்தர்! கருவழி கடப்பார் நெஞ்சில் கடவுளென் றென்னை வைப்பார்; அருவழி கடப்பார் சாலை அருகினில் நிறுத்தி வைப்பார்; இருவரும் எனையே எண்ணி ஏகுவர் மேலும் மேலும்; பெருமைகள் அனைத்தும் நானே பேசுதல் முறைமை யாமோ? |